லாரி மோதி நாளை தேர்வெழுதவிருந்த மாணவன் பலி! தேவாலயத்துக்கு சென்றுவிட்டு திரும்பும்போது சோகம்

 
Accident

மணப்பாறை அருகே ஓட்டுனரின் மது போதையால் தறிகெட்டு ஓடிய கண்டெய்னர் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 12 ம் வகுப்பு பள்ளி மாணவர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள இடையப்பட்டி யைச் சேர்ந்தவர் அந்தோணி பீட்டர் (வயது 51), இவரது உறவினர் இன்னாசிமுத்து மற்றும் மகன் 12 ம் வகுப்பு மாணவர் பிலோமின்தாஸ் ஆகிய இருவரும் உடையாபட்டியிலுள்ள தேவாலயத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் இடையபட்டி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். 

பன்னாங்கொம்பு மேற்குகளம் அருகே செல்லும்போது எதிரே வந்த கன்டெய்னர் லாரி இரு சக்கர வாகனத்தின் மீது சிறிது தூரம் இழுத்துச்சென்றது. இதில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆனால் லாரி நிற்காமல் சாலையில் அங்குமிங்குமாக அலசியவாறு செல்வதைக்கண்ட சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் லாரியை நிறுத்தமுயன்றுள்ளனர். ஆனால் லாரி நிற்காமல் சாலையோரம் இருந்த மரக்கிளைகளையும் உடைத்தெரிந்தவாறு தொடர்ந்து மணப்பாறை நோக்கி சென்ற நிலையில் இதுகுறித்து மணப்பாறையில் உள்ள நண்பர்களுக்கு தகவல் அளித்தனர். 
தகவலின் பேரில் மணப்பாறை நகராட்சி அலுவலகம் அருகே ஆம்புலன்ஸ் வாகனத்தை சாலையின் குறுக்கே நிறுத்தி கண்டெய்னர் லாரியை மடக்கிப்பிடித்து மணப்பாறை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் லாரி ஓட்டுனர் மணப்பாறை அருகே உள்ள பெரிய அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த டேவிட் ஆனந்தராஜ் (வயது 37) என்பதும், அவர் மதுபோதையில் இருந்ததும், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் இருந்து நூல் பண்டல்கள் ஏற்றிக்கொண்டு  மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூருக்கு சென்று கொண்டிருந்ததும் தெரியவந்தது. 

இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற இடம் புத்தாநத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் மணப்பாறை போலீசார் லாரி ஓட்டுனர் டேவிட்ஆனந்தராஜை புத்தாநத்தம் போலீசிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்த புத்தாநத்தம் போலீசார் லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுனரின் மது போதையால் தறிகெட்டு ஓடிய கண்டெய்னர் லாரி மோதி நாளை பொதுத்தேர்வு எழுத இருந்த ப்ளஸ் டூ மாணவர் உள்ளிட்ட  இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.