ஹோட்டலில் வழங்கப்பட்ட பீட்ரூட் பொறியலில் எலியின் தலை - ஆரணியில் பரபரப்பு

 
Beetroot

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே தனியார் சைவ உணவகத்தில் வழங்கப்பட்ட பீட்ரூட் பொறியலில் இறந்துபோன எலியின் தலை கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே கோட்டை மைதானம் செல்லும் வழியில் பிரபல சைவ உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆரணி காந்தி நகரை சேர்ந்த முரளி என்பவரது உறவினர் இறந்துவிட்ட நிலையில், விசேசத்திற்காக இந்த உணவகத்தில் சாப்பாடு ஆர்டர் செய்துள்ளார். அந்த உணவகத்தினரும் குறிப்பிட்ட நேரத்திற்கு வாகனத்தில் கொண்டு வந்து உணவை டோர் டெலிவரி செய்துள்ளனர். இதனையடுத்து அந்த உணவு முரளியின் உறவினர்கள் அனைவருக்கும் பரிமாரப்பட்டு அனைவரும் சாப்பிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து மீதமான உணவுகளை வீட்டில் உள்ள வேறு பாத்திரத்திற்கு மாற்றிய போது உணவகத்தில் வழங்கப்பட்ட பீட்ரூர் பொரியலில், செத்த எலியின் தலை கிடந்துள்ளது. 

Beetroot

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முரளி சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில், ஆனால் அந்த உணவகத்தினர் எந்தவித பதிலும் தெரிவிக்காமல் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முரளி, அந்த பீட்ரூட் பொறியலை எடுத்துக்கொண்டு அந்த பகுதியை சேர்ந்த நகரமன்ற உறுப்பினர் வினாயகம் தலைமையில் உணவகத்திற்கு முன் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்ற ஏற்பட்ட நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தர்ணாவில் ஈடுப்பட்ட நபர்களை அப்புறப்படுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். மேலும் சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு சென்ற  உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவு மாதிரி எடுத்து பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். உணவகத்தில் வழங்கப்பட்ட பீட்ரூட் பொறியலில் செத்த எலியின் தலை கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.