அரசு பேருந்து மீது மோதிய தனியார் பேருந்து- பள்ளி மாணவர்கள் உட்பட 30 பேர் காயம்

 
Accident

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே நின்றுகொண்டிருந்த அரசு பேருந்து மீது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 30 பேர் காயம் அடைந்தனர்.

தருமபுரி மாவட்டம் மஞ்சவாடியில் இருந்து அரூர் நோக்கி இன்று காலை அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட சுமார் 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். சேலம்-அரூர் நெடுஞ்சாலையில் உள்ள தண்ணீர்தொட்டி பேருந்து நிறுத்தத்தில், அரசு பேருந்து நின்றுகொண்டிருந்த நிலையில், அதில் பயணிகள் இறங்கிக் கொண்டிருந்தனர். 

இந்நிலையில், சேலத்தில் இருந்து அரூர் நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து எதிர்ப்பாராத விதமாக நின்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பின் பக்கத்தில் மோதியது. இதனால் அரசு பேருந்தின் பின் பக்கம் பயங்கர சேதம் அடைந்த நிலையில், உள்ளே இருந்த பள்ளி மாணவர்கள் உட்பட 30 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் அதிகளவில் காயம் ஏற்பட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் சேலம்-அரூர் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இரண்டு பேருந்துகளையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.