எங்கவீட்டு பெண்ணையே காதலிப்பியா? இளைஞரை கொன்று உடலை கால்வாயில் வீசிய உறவினர்கள்

 
Murder

ஈரோடு அருகே போக்சோ வழக்கில் தொடர்புடைய இளைஞரை அடித்து கொலை செய்து சடலத்தை கால்வாயில் வீசிசென்ற சிறுமியின் உறவினர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

முற்றுகையிட்ட உறவினர்கள்


ஈரோடு மாவட்டம் காஞ்சி கோவில் அடுத்த வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் பூபதி (25). சென்ட்ரிங் வேலை பார்த்து வந்தார். பெருந்துறையை சேர்ந்த சிறுமி ஒருவரை காதலித்த பூபதி,  கடந்த 2021 ல் போக்சோ வழக்கில் கைதானார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த 4-ம் தேதி இரவு   மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றவர்  வீடு திரும்பவில்லை.  இது குறித்து அவரது சகோதரி காஞ்சிகோவில் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பூபதியை தேடி வந்தனர்.  இந்நிலையில் நேற்று காஞ்சிகோவில் இருந்து சித்தோடு செல்லும் வழியில் கரட்டுபாளையம் என்ற இடத்தில்   கசிவுநீர் கால்வாயில் அவர் சடலமாக கிடப்பது தெரியவந்தது. அருகிலேயே அவரது பைக்கும் மீட்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தியதில் பூபதி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  போலீசாரின் விசாரணையில் ஏற்கனவே பூபதி காதலித்து போக்சோ வழக்கில் கைதாக காரணமாக இருந்த சிறுமியின் உறவினர்கள், பூபதியை அழைத்துச் சென்று கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்து சடலத்தை கால்வாயில் வீசிச் சென்றது தெரியவந்தது.
 
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த பூபதி, சிறுமியின் சகோதரர் உறவு முறை கொண்ட விக்னேஷ் என்பவருக்கு அடிக்கடி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தன்னை எதுவும் செய்ய முடியாது என்ற ரீதியில் கேலியாக பேசி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ், சிறுமியின் தந்தை ஆறுமுகம் மற்றும் உறவினர் பரமசிவம் ஆகிய மூவரும் சேர்ந்து பூபதியை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
 
மதுபான கடை அருகே போதையில் இருந்த பூபதியை கொலை செய்து சடலத்தையும், அவரது வாகனத்தையும் 5 கிமீ தொலைவில் கால்வாய் கரையில் வீசி சென்றுள்ளனர். அதன் பின்னர், விக்னேஷ் சபரிமலைக்கு மாலை அணிந்து கொண்டு எதுவும் தெரியாதது போல் நடித்துள்ளார். எனினும் சடலத்தை மீட்டு விசாரணை நடத்திய போலீசார் விக்னேசையும், உறவினர் பரமசிவத்தையும் கைது செய்தனர். தலைமறைவாக ஆறுமுகத்தை போலீசார் தேடி வருகின்றனர். காதலித்தபோது சிறுமியின் ஆபாச புகைப்படத்தை எடுத்து வைத்திருப்பதாகவும் பூபதி விக்னேஷிடம் கூறியிருக்கின்றார். இதனால் கொலை செய்ததாக அவர் வாக்கு மூலத்தில் தெரிவித்து இருக்கின்றார்.