தோட்ட காவலாளியை துப்பாக்கியால் சுட்ட வேட்டை கும்பல் - போலீஸ் வலைவீச்சு

 
shooting

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தோட்ட காவலாளியை துப்பாக்கியால் சுட்ட வேட்டை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். 

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் காட்டெருமை, மான் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வன விலங்குகளிடம் இருந்து தங்களது விவசாய நிலங்களை பாதுகாப்பதற்காக அந்தந்த தோட்டத்தின் உரிமையாலர்கள் தங்களது நிலங்களுக்கு இரவு நேர காவலாளிகளை நியமித்துள்ளனர். இதேபோல் அந்த வன விலங்குகளை வேட்டையாடவும் இரவு நேரங்களில் வேட்டை கும்பல்கள் அங்கு உலாவி வருகின்றன.  

இதனிடையே கும்பகோணத்தை சேர்ந்த கார்த்தி என்பவர் பழனி அருகே மானூர் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வரும் நிலையில்,  நேற்று நள்ளிரவு அந்த பகுதியில் வேட்டை கும்பல் ஒன்று உலாவியுள்ளது. இதனை கண்ட கார்த்தி அவர்களை கண்டு சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், வேட்டைக்கு பயன்படுத்தும் துப்பாக்கியால் சார்த்தியை சுட்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த கார்த்தி உயிருக்கு ஆபத்தான நிலையில், பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கார்த்தியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தலைமறைவான வேட்டை கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.