திடீரென தீப்பிடித்து எரிந்த பள்ளி வாகனம் - ஓட்டம் பிடித்த மாணவர்கள்

 
Bus Fire

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்து எரிந்ததில் மாணவ, மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் பிரபல தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் அரக்கோணம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் பள்ளி வாகனங்கள் மூலம் பள்ளிக்கு அழைத்து வரப்படுகின்றனர். வழக்கம் போல் இன்று  காலை பள்ளி வாகனம் ஒன்று அரக்கோணம் அருகே சேத்தமங்கலத்திற்கு சென்று 10 மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு பள்ளியை நோக்கி வந்துகொண்டிருந்தது. 
 
சேத்தமங்கலம் ரயில்வே கேட்டை கடந்து வந்துகொண்டிருந்த போது அந்த வாகனத்தின் பின்பக்கத்தில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. இதனை பின்னால் வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் பார்த்து ஓட்டுநரிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து வாகனம் உடனடியாக சாலையோரம் நிறுத்தப்பட்டு மாணவர்கள் கிழே இறக்கிவிடப்பட்டனர். மாணவர்கள் கிழே இறங்கிய சிறிது நேரத்தில் பள்ளி வாகனம் முழுவது தீப்பிடித்து எரிந்தது. பேட்டரி ஒயர் ஒன்றோடு ஒன்று உராய்ந்ததால் தீ பிடித்ததாகவும், பல ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாமல் பஸ் இயக்கப்படுவதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து நெமிலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.