மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை - சதீஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

 
parangimalai sathish

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த 13 ஆம் தேதி சத்யா என்ற தனியார் கல்லூரி மாணவி சதீஷ் என்ற வாலிபரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கு தொடர்பாக சதீஷ் என்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மாணவி சத்யா கொல்லப்பட்ட நிலையில் மகள் இறந்த சோகத்தில் கடந்த 14 ஆம் தேதி சத்யாவின் தந்தை மாணிக்கமும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரம் தொடர்பான வழக்கு தமிழக டிஜிபி சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார்.

gundas

இதையடுத்து டி.எஸ்.பி.செல்வகுமார் தலைமையில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்டுள்ள சதீசுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுக் கொடுக்க முடிவு செய்தனர். இதற்காக சிறையில் உள்ள சதீசை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க கோரி சைதாப்பேட்டை கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வீடியோ கான்பரன்சிங் மூலமாக சதீஷ் ஆஜர்படுத்தப்பட்டார். காவல்துறையின் மனுவை விசாரித்த நீதிமன்றம், சதீஷை ஒருநாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது. இதையடுத்து சதீஷை சிறையில் இருந்து சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், கைதான சதீஷ் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீசாரின் பரிந்துரையில் சென்னை மாநகர காவல் ஆணையர் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.