நெஞ்சை பதறவைக்கும் சோகம்: வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்த 9 வயது பள்ளி மாணவி உயிரிழப்பு..!
கிழக்கு டெல்லியின் மயூர் விகார் பேஸ் 2 பகுதியில் இயங்கி வரும் 'லவ்லி ஹெரிடேஜ் பள்ளி' (Lovely Heritage School) வகுப்பறையில், 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான காட்சிகள் பள்ளியின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், அவசர மருத்துவ உதவி மற்றும் முதலுதவி வழங்குவதில் பள்ளி நிர்வாகம் அலட்சியம் காட்டியதாக மாணவியின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
பள்ளியின் சிசிடிவி காட்சிப் பதிவுகளின்படி, விளையாட்டுப் பயிற்சி முடிந்து வகுப்பறைக்குத் திரும்பிய அந்தச் சிறுமி, திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். விழுவதற்கு சில நொடிகளுக்கு முன்பு, சோர்வு காரணமாகச் சிறுமி தனது கையை இடுப்பில் வைப்பது பதிவாகியுள்ளது. உடனடியாக ஓடிவந்த வகுப்பு ஆசிரியர், சிறுமியைத் தூக்கி நாற்காலியில் உட்கார வைக்க முயன்றுள்ளார். ஆனால், சிறுமி முழுமையாகச் சுயநினைவை இழந்திருந்தார். இதையடுத்து, ஆசிரியர் உடனடியாக வெளியேச் சென்று பிற ஊழியர்களின் உதவியுடன் சிறுமியை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றுள்ளார்.
சம்பவம் நடந்த உடனே சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், பின்னர் நிர்மான் விகாரில் உள்ள மாலிக் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்ததுடன், மாரடைப்பு (Cardiac Arrest) காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்துப் பள்ளி முதல்வர் பாவ்னா மாலிக் கூறுகையில், "இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். சிறுமி வகுப்பறையில் மயங்கி விழுந்தவுடனே நாங்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். பள்ளி செவிலியர் சோதித்தபோது சிறுமியின் முகவாய்க்கட்டையில் (Chin) காயம் ஏற்பட்டு ரத்தம் கசிவதைப் பார்த்தோம். அதனால் எழுந்த மயக்கமாக இருக்கலாம் என நினைத்தோம். ஆனால் மருத்துவர்கள் மாரடைப்பு எனக் கூறிவிட்டனர்" என்றார்.
இருப்பினும், பள்ளி நிர்வாகத்தின் மீதான குடும்பத்தினரின் குற்றச்சாட்டுகள் வலுத்து வருகின்றன. அதிகளவில் கட்டணம் வசூலிக்கும் பள்ளி நிர்வாகத்திடம் அவசர மருத்துவ வசதிகளோ, சிபிஆர் (CPR) வழங்கும் அளவுக்குப் பயிற்சி பெற்ற பணியாளர்களோ இல்லை என உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். சிறுமி மயங்கி விழுந்த உடனே சிபிஆர் முதலுதவி ஏன் வழங்கப்படவில்லை என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பியுள்ளனர். இச்சம்பவம் டெல்லி முழுவதும் உள்ள பள்ளிகளில் அவசர மருத்துவ முதலுதவிப் பயிற்சிகளின் அவசியத்தை மீண்டும் பெரிய விவாதமாக்கியுள்ளது.
🚨SHOCKING | Girl suddenly collapses and dies inside her classroom at a school in Delhi’s Mayur Vihar https://t.co/A7s5ESuNya
— The Tatva (@thetatvaindia) November 4, 2026

