9ம் வகுப்பு மாணவிக்கு விடுதி வார்டன் பாலியல் தொல்லை
நெல்லையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தங்கும் விடுதி பெண் வார்டன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை மேலப்பாளையத்தில் இஸ்லாமிய மாணவிகளுக்கான தங்கும் விடுதி ஒன்று பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவிகள் தங்கி இருந்து படிக்கின்றனர். இந்த நிலையில் 14 வயதுடைய 9 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு அங்குள்ள வார்டன் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவி இது குறித்து சக மாணவிகளிடம் தெரிவிக்க அவர்கள் அங்கிருந்த பெண் வார்டனிடம் கூறியுள்ளனர். அப்போது அந்தப் பெண் வார்டன் இந்த விஷயங்களை வெளியில் கூற வேண்டாம் என கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனது பெற்றோர்களிடம் இந்த சம்பவம் குறித்து தெரிவிக்க அவர்கள் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கானது பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வார்டனான மேலப்பாளையம் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த அபூபக்கர் (வயது 46), என்பவரையும் தென்காசி மாவட்டம் நடுப்பேட்டையைச் சேர்ந்த வகிதா (வயது 43), என்ற பெண் வார்டனையும் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவம் நெல்லை சுற்றுவட்டார பகுதிகளில் தங்கும் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவிகளின் பெற்றோர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


