இறந்த பின்பும் 7 பேருக்கு வாழ்வளித்த 8 வயது சிறுமி வெண்பா..!

 
1

கோவையை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது 8 வயது மகள் பெயர் வெண்பா,கடந்த 23.02.2026 தேதி அன்று  சிறுமி வெண்பாவிற்கு இரத்த அழுத்தம் அதிகமாகி  மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு சுயநினைவிழுந்தாள்.

உடனடியாக அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வெண்பாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.

இந்த நிலையில் 25.02.2026ம் தேதி சிறுமிக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்கள்  அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.இதை தொடர்ந்து தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன் அவரது கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், எலும்பு மற்றும் தோல் ஆகியவை தானமாக பெறப்பட்டது.

கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம்,கே.எம்.சி.ஹெச். மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம், கண்கள், எலும்பு மற்றும் தோல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், வழங்கப்பட்டது. கே.எம்.சி.ஹெச் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள்  உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு தகுந்த நேரத்தில் மிகவும் திறம்பட செயல்பட்டு உறுப்புகளை அனுப்பிவைத்தனர்.மருத்துவ விதிமுறைகள் மற்றும் அரசு வழிகாட்டுதலின்படி அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. இந்த மனிதநேய செயல் சமூகத்தில் பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டையும் ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல. ஜி பழனிசாமி கூறுகையில், மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். பின்னர்  உடல் உறுப்பு தானம் வழங்கிய செல்வி.வெண்பா குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

 


மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு வழிகாட்டுதலின்படி, வருவாய் துறையின் சார்பில் கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியர் மற்றும் கோவை தெற்கு வட்டாட்சியர் நேரில் வந்து மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.