இன்று 13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் தேர்தல்..!

 
11

கடந்த 19ம் தேதி நடந்த முதல் கட்டத் தேர்தலில் 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று  88 தொகுதிகளுக்கு நடக்கிறது.

ஏப்ரல் 26ம் தேதி(இன்று) நடக்கும் தேர்தலில் கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. அது தவிர கர்நாடகாவில் 14 தொகுதிகள், ராஜஸ்தானில் 13 தொகுதிகள், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிராவில் தலா 8 தொகுதிகள், மத்தியப்பிரதேசத்தில் 6 தொகுதிகள், பீகார், அசாமில் தலா 5 தொகுதிகள், சத்தீஸ்கர், மேற்கு வங்கத்தில் தலா 3 தொகுதிகள், திரிபுரா, ஜம்மு காஷ்மீர், மணிப்பூரில் தலா ஒருதொகுதியில் தேர்தல் நடக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கிறது. ஜூன் 1ம் தேதி வாக்குப்பதிவுகள் அனைத்தும் முடியும் நிலையில் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் இன்று நடக்கும் 2வது கட்டத் தேர்தலில் 8தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த 8 தொகுதிகளிலும் மும்முனைப் போட்டி நிலவுகிறது. பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி கூட்டணி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் மோதுகின்றன. உத்தரப்பிரதேசத்தின் அம்ரோஹா, மீரட், பாக்பத், காஜியாபாத், கவுதம் புத்தா நகர், புலந்த்சஹர், அலிகார்க், மதுரா ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.

**** 2019ல் நிலவரம் என்ன****

2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இந்த 88 தொகுதிகளி்ல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 61 இடங்களில் வென்றது. பாஜக 52, சிவசேனா 4, ஜேடியு 4, சுயேட்சை ஒரு இடத்திலும் வென்றன. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 24 இடங்களில் வென்றது.

காங்கிரஸ் 18 இடங்கள், ஐயுஎம்எல் 2 இடங்கள், ஜேடிஎஸ் 1, கேரள காங்கிரஸ் மாணி 1, ஆர்எஸ்பி 1, சுயேட்சை ஒரு இடத்திலும் வென்றனர். இது தவிர பகுஜன் சமாஜ், சிபிஎம், என்பிஎப் தலா ஒரு இடத்தில் வென்றன.