புதிய தொழிற்சாலைகளில் 80% தமிழர்கள் தான் பணியாற்றுகிறார்கள்- அமைச்சர் தங்கம் தென்னரசு

 
புதிய தொழிற்சாலைகளில் 80%  தமிழர்கள் தான் பணியாற்றுகிறார்கள்-  அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழகத்தில் உள்ள புதிய தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்கள் 80% பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என  அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இன்றைய கேள்வி நேரத்தின்போது  சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார்,  ஓசூரில் வர்த்தக மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.  அதேபோல் தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பாக,  கொள்கை கொண்டு வரப்படுமா என்று  எழிலன் எம்.எல்.ஏவும்,  ஒசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டியும்  கேள்வி எழுப்பினர்.

டாடா

இந்தக் கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “ஓசூரில் வர்த்தக மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். புதிய தொழிற்சாலைகளில் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தமிழ்நாடு அரசு நடத்திய ஆய்வில் புதிய தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்கள் 80% பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து அரசு ஆராயும்” என்று கூறினார்..