காணாமல் போன சிறுமி... ஊரையே வலம் வந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி! கடைசியில் எங்கு இருந்தார் தெரியுமா?

 
ச் ச்

ஆம்பூர் அருகே பள்ளிக்குச் சென்ற 8 வயது சிறுமி காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில் சிறுமி வீட்டிலே கட்டிலுக்கு அடியில் உறங்கிக்கொண்டு இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவார் கட்டிட தொழிலாளி பாபு. இவரது  இரண்டாவது மகள் தனஸ்ரீ(8 வயது). இவர் அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் இன்று காலை வீட்டிலிருந்து “பள்ளிக்குச் செல்கிறேன்” என கூறிவிட்டு வெளியேறிய சென்ற தனஸ்ரீ, காலை 10 மணி ஆகியும் பள்ளிக்கு வராததால், பள்ளியில் இருந்து ஆசிரியர்  பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.தகவலை கேட்டு பதறிப்போன பெற்றோர், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் இணைந்து பல்வேறு பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டனர். தனுஸ்ரீ கிடைக்காததால் பெற்றோர் உமராபாத் காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தனஸ்ரீ இன்று காலை அவருடைய தாய் ஜெயலட்சுமியின் செல்போனை எடுத்துக் கொண்டு பையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் செல்போன் டவர் மூலம் தேடுதல் பணி தொடங்கினர். இந்நிலையில், வெங்கடசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெளியூரை சேர்ந்த மூன்று குடுகுடுப்பைக்காரர்கள் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித் திரிந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். மாந்திரீகம் செய்வதற்காக சிறுமியை கடத்திச் சென்றிருக்கலாம் என்ற அச்சத்தில், கிராம மக்கள் அந்த குடுகுடுப்பைக்காரர்களை தேடிச்செல்ல, அவர்களில் ஒருவரை காண முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், ஊரில் சுற்றித் திரிந்த 2 குடுகுடுப்பைக்காரர்களை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அந்த இருவரையும் உமராபாத் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் உமராபாத் காவல் ஆய்வாளர் கிஷோர் குமார் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் தனஸ்ரீயை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் மாலை 5 மணி அளவில் போலீசார் வீட்டில் ஆய்வு செய்த போது வீட்டில் அறையில் இருந்த கட்டிலுக்கு அடியில் சிறுமி உறங்கிக்கொண்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.  சிறுமி வீட்டிலே கிடைத்ததால் பெற்றோர்கள் சந்தோஷமடைந்து தேடும் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.