8 பேருக்கு உண்ணி காய்ச்சல்! திண்டுக்கல்லில் பதற்றம்

 
ச் ச்

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், வேடந்தூர், நிலக்கோட்டை, நத்தம் ஆகிய பகுதிகளில் இருந்து 8 பேர் உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

திண்டுக்கல்லில் ஸ்கரப் டைபஸ் எனும் வகையிலான பூச்சி கடிப்பதால் ஏற்படும் உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த மாதத்தில் இருந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  குறிப்பாக டிசம்பர்  மாதத்தில் குஜிலியம்பாறை, ஒட்டன்சத்திரம் பகுதிகளை சேர்ந்த இருவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிர் இழந்தனர்.  சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும் பாதிப்புகள் குறையாமல்  பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமாக இருந்தது. இதற்கென அரசு மருத்துவமனையில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது உண்ணிக் காய்ச்சலால் 8 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி செல்வகுமார் கூறுகையில், “காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டு ஒதுக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது. ஒருசிலர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு செல்கின்றனர். அதேபோல் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று காய்ச்சல் முகாம் அமைத்து அதன் மூலம் நோய் தொற்று உள்ளவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வகை காய்ச்சலால் 2, 3 நாட்களுக்கு ஒருவர் என பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இந்த வாரத்தில் மட்டும் 8 பேர் உண்ணிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. மாவட்ட சுகாதார துறையினர் உண்ணிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று கிருமி நாசினி தெளிப்பது, சுற்றுபுறங்களை  தூய்மையாக்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்” என தெரிவித்தார்.