சென்னையில் பெய்து வரும் கனமழை - 8 விமான சேவைகள் ரத்து

 
airport

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்லக்கூடிய 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான கோயம்பேடு, மதுரவாயல், வானகரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சாலையில் ஆங்காங்கே மழை நீர், குளம் போல் தேங்கியுள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் திணறி செல்கின்றனர். இந்த நிலையில், கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்லக்கூடிய 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, ஐதராபாத், கர்னூல் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விமான சேவைகள் ரத்துசெய்யப்பட்டு உள்ளது. 

flight

இதனிடையே சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில்  அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துஉள்ளது.