7000 வாடகை, 12000 சம்பளம் - இதுதான் இன்றைய நிலை..! - தொழிலாளர்களின் அவலநிலையைச் சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி..!

 
rahul

டில்லிக்கு அருகில் உள்ள நொய்டாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில், ஊதிய உயர்வு கோரி தொழிலாளர்கள் நேற்று முன்தினம் நடத்திய போராட்டம், பல தொழிற்சாலைகளுக்கும் பரவி, வன்முறையாக மாறியது. இதில், தொழிலாளர்கள் மற்றும் ஆலை நிர்வாகங்களின் வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. பல தலைவர்கள் அந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். 

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் இதுபற்றி நேற்று கூறியதாவது: மத்தியில் ஆளும் பிரதமர் மோடி அரசின் தோல்வி அடைந்த கொள்கைகளால், இந்த நாட்டின் உழைக்கும் வர்க்கம் மிகுந்த அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளது என்பது நேற்றைய போராட்டங்களை பார்க்கும் போது தெரிகிறது. அமெரிக்காவின் நேரடி வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள், மிகவும் குறைந்த சம்பளத்தில் பணியாற்ற வேண்டியுள்ளது. பிரதமர் மோடியின் தொழில் நண்பர்களால், தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்களின் வீட்டு வாடகை எகிறியுள்ளது. 7,000 ரூபாய் வாடகைக்கு, 12 ஆயிரம் ரூபாய் மாத சம்பளம் வாங்கும் தொழிலாளர், தன் குழந்தைகளுடன் தங்கியுள்ளார். அவர்கள், தங்களுக்கு சம்பள உயர்வு தாருங்கள்; குறைந்தபட்ச சம்பளத்தை, 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தாருங்கள் என மத்திய அரசை கேட்கின்றனர். அவ்வாறு கேட்பது தவறு அல்ல. இந்த நாட்டின் முதுகெலும்பு போல விளங்கும் தொழிலாளர்களின் உரிமையைத் தான் கேட்கின்றனர். 

ஆனால், பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை காரணமாக காட்டி, சம்பளத்தை உயர்த்த மத்திய அரசு மறுக்கிறது. பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு, மேற்காசிய போரால், அனைத்து நாடுகளிலும் எதிரொலிக்கிறது. இதில், இந்தியா மட்டும் பாதிக்கப்படவில்லை; உலக நாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. தன் வேலையுண்டு தானுண்டு என இருக்கும் தொழிலாளர்கள், மத்திய அரசின் பாராமுகத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். சம்பள உயர்வு பற்றி கேட்டால், அடக்குமுறைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதை, அனுமதிக்க முடியாது. இந்த நாட்டின் உழைக்கும் வர்க்கம், மத்திய அரசின் தோல்வி அடைந்த திட்டங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதை சரிப்படுத்த வேண்டும். ஆனால், அதை சரி செய்ய மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை. இவ்வாறு, ராகுல் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, சமூக வலைதளத்தில் தவறான செய்திகளை பரப்பியதாக, இரண்டு பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.