காய்ச்சலால் 7 வயது சிறுமி உயிரிழப்பு! காஞ்சிபுரத்தில் சோகம்
காஞ்சிபுரத்தில் காய்ச்சல் காரணமாக 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ரங்கசாமி குளம் அருகே, ஏ.கே.டி தெருவில் வசித்து வருபவர் சக்திவேல் - சரண்யா தம்பதியினர். சக்திவேல் தனியார் கல்லூரியில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். தாய் சரண்யா துணிக்கடையில் பணியாற்றி வருகிறார். சக்திவேல் மற்றும் சரண்யா தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இதில் இரண்டாவது பெண் குழந்தை கார்த்திகா, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திடீர் காய்ச்சலால் பாதிப்படைந்துள்ளார். கார்த்திகாவிற்கு காய்ச்சல் ஏற்பட்டவுடன், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தந்தை சக்திவேல் கார்த்திகாவை அழைத்து சென்றுள்ளார். தொடர்ந்து அங்கு மருத்துவர்கள் கார்த்திகாவிற்கு சிகிச்சை அளித்துவிட்ட பிறகு, காய்ச்சல் சரியாகிவிடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் திடீரென கார்த்திகாவிற்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது.அதிக காய்ச்சல் காரணமாக, கார்த்திகா மயக்க நிலைக்கும் சென்றுள்ளார். இதனால் பதறிய பெற்றோர் உடனடியாக, காஞ்சிபுரம் காரப்பேட்டை பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு கார்த்திகாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக சென்னை செல்லுமாறு அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கார்த்திகாவை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சில மணி நேரம் சிகிச்சை பெற்ற கார்த்திகா சிகிச்சை பல நன்றி உயிரிழந்தார். காய்ச்சல் காரணமாக காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து காஞ்சிபுரம் சுகாதாரத்துறை இணை இயக்குனரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, "காய்ச்சல் எதனால் வேண்டுமென்றாலும் வரலாம், அந்த குழந்தைக்கு டெங்கு அல்லது தொற்றக்கூடிய எந்தவித பாதிப்பும் இல்லை. அந்த பகுதி முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசோதனையும் செய்து முடிக்கப்பட்டுள்ளது. டெங்கு உள்ளிட்ட எந்த பாதிப்பும் இல்லை எனவே தெரிகிறது. வேற ஏதாவது பாதிப்பு காரணமாக இந்த உயிரிழப்பு சம்பவம் நடைபெற்றதா என விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.


