7 எம்பிக்கள் விலகல்: கட்சி சரியாக இருந்திருந்தால் தலைவர்கள் ஏன் வெளியேறுகிறார்கள்? அண்ணா ஹசாரே கேள்வி..!
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராகவும், ராஜ்ய சபாவில் அக் கட்சியின் துணைத் தலைவராகவும் இருந்தவர் ராகவ் சதா. இவரை சமீபத்தில் மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியில் இருந்து அக்கட்சி தலைமை நீக்கி நடவடிக்கை மேற்கொண்டது. இதனால் அதிருப்தியில் இருந்த ராகவ் சதா, தற்போது ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகியதாக அறிவித்துள்ளார். மேலும், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேருடன் பாஜகவில் இணைந்ததாக அறிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய முகங்களாக அறியப்படும் ஹர்பஜன் சிங், ஸ்வாதி மாலிவால், சந்தீப் பதக், விக்ரம் சிங் சாஹ்னி, அசோக் குமார் மிட்டல் மற்றும் ரஜீந்தர் குப்தா ஆகியோரும் ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியமாகினர். இவர்கள் அனைவரும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது அக்கட்சியின் மொத்த மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு மடங்கு ஆகும்.
இந்த நிலையில், புதுடெல்லியில் சந்தீப் பதக் மற்றும் அசோக் குமார் மிட்டல் ஆகியோருடன் இணைந்து ராகவ் சதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சிக்கு 10 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான உறுப்பினர்கள் 7 பேர் அக்கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்துள்ளோம்.
ஆம் ஆத்மி தேசிய நலனுக்காக அல்லாமல், அதன் சொந்த நலனுக்காக செயல்படுகிறது. என் ரத்தத்தையும், வியர்வையும் சிந்தி கட்சியின் வளர்சிக்காக உழைத்திருக்கிறேன்.ஆனால், இன்று அந்த கட்சி ஊழல்மயமாகிவிட்டது. மேலும், தவறான கட்சியில் ஓர் சரியான நபராக நான் இருப்பதாக பலர் என்னிடம் தெரிவித்தனர். இனிமேல் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவேன்" என்றார்.
இதற்கிடையே, மற்றொரு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் சிங், கட்சியில் இருந்து விலகிய ஏழு உறுப்பினர்களையும் கடுமையாகச் சாடினார். இது குறித்து அவர் கூறுகையில், "இந்த ஏழு பேரும் மக்களுக்கு துரோகம் செய்து விட்டனர். மக்கள் இவர்களை ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்.
இந்நிலையில், ஏழு மாநிலங்களவை எம்.பி.க்கள் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து வெளியேறியதால் அரசியலில் பெரும் புயல் வெடித்தது. இதற்கு ஆம் ஆத்மி கட்சி "அதிகாரத்திற்கும் பணத்திற்கும் முன்னுரிமை அளிப்பதே" காரணம் என்று மூத்த சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது, "அவர்கள் (முன்னாள் ஆம் ஆத்மி எம்.பி.க்கள்) சில உட்கட்சிப் பிரச்சனைகளைச் சந்தித்திருக்கலாம், அதன் காரணமாக அவர்கள் கட்சியை விட்டு வெளியேறினர். ஏதோ ஒரு காரணம் இருக்கலாம்."
ஆம் ஆத்மி தலைமை "சுயநலமாக" இருப்பதாகவும், "அதிகாரம் மற்றும் பணத்தில்" மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் அந்த சமூக ஆர்வலர் குற்றம் சாட்டினார்.
"எந்தத் தலைவர் வெளியேறினாலும், அது கட்சியின் தவறு. ஆம் ஆத்மி கட்சி சரியாகச் செயல்பட்டிருந்தால், அதன் தலைவர்கள் வெளியேறியிருக்க மாட்டார்கள். சுயநலம் தலைதூக்கும்போது, மக்கள் மறந்துவிடுகிறார்கள்," என்று ஹசாரே குற்றம் சாட்டினார்.
ஹசாரே மேலும் கூறுகையில், "கட்சி சமூகத்திற்கும் நாட்டிற்கும் முன்னுரிமை அளித்து செயல்பட்டிருந்தால், இந்தத் தலைவர்கள் வெளியேறியிருக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் இந்தக் கொள்கைகளின்படி செயல்படுவதை மறந்து, அதற்குப் பதிலாக தங்கள் கவனத்தை அதிகாரம் மற்றும் பணத்தின் பக்கம் திருப்பினர்." என்றார்.

