ஆசிரியை அடித்ததால் வகுப்பறையிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த 6 வயது சிறுவன்!
விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆறு வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்; வீட்டுப்பாடத்தை முடிக்காததால் ஆசிரியரால் அவன் தாக்கப்பட்டதாக அவனது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
வீட்டுப்பாடத்தைச் செய்யாததற்காக ஆசிரியர் ஒருவர் குச்சியால் தாக்கியதில், பிரணய் தேஜா என்ற சிறுவன் மயங்கி விழுந்ததாக அவனது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவன் கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்கு (KGH) கொண்டு செல்லப்பட்டான், அங்கு மருத்துவர்கள் அவன் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
வகுப்பறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளின்படி, சிறுவன் கையில் ஸ்லேட்டைப் பிடித்துக் கொண்டு பயத்துடன் வரிசையில் நின்று ஆசிரியையிடம் கெஞ்சும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இருப்பினும், ஆசிரியை அந்தச் சிறுவனை அருகில் இழுத்துக் கன்னத்தில் ஓங்கி அடித்த சில விநாடிகளிலேயே, சிறுவன் நிலைகுலைந்து ஆசிரியை மீதே சுருண்டு விழுந்துள்ளான். பதற்றமடைந்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாகச் சிறுவனை மீட்டு கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்குக் (KGH) கொண்டு சென்ற போதிலும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குடும்பத்துடன் வழிபாட்டுச் தலங்களுக்குச் சென்றுவிட்டு முந்தைய நாள் இரவே திரும்பியதால் சிறுவனால் வீட்டுப் பாடத்தை முடிக்க முடியவில்லை என்றும், ஆரோக்கியமாக இருந்த தங்களது மகனுக்கு உடனடியாக எவ்விதத் தகவலும் தெரிவிக்காமல் பள்ளி நிர்வாகமே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகச் சிறுவனின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். சிறுவன் பயத்தின் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் எனக் சந்தேகிக்கப்படும் நிலையில், உடற்கூறாய்வு அறிக்கைக்குப் பிறகே உயிரிழப்பிற்கான உண்மையானக் காரணம் தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்தத் தகவல் பரவியதும் சிறுவனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளி வளாகம் மற்றும் மருத்துவமனை முன்பாகத் திரண்டு, கொடூரமாக நடந்து கொண்ட ஆசிரியை மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அம்மாநில மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் இச்சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

