அரசு வேலைக்காக 67 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருப்பு..

 
Department of Employment and Training

தமிழகம் முழுவதும் 67 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது..

தமிழகத்தில்  பள்ளிப்படிப்பு மற்றும் கல்லூரி படிப்புகளை முடிப்பவர்கள், அதனை  வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவ்வாறு பதிவு செய்தோர், ஒவ்வொரு காலக்கட்டத்திலும், தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர். குறிப்பாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவை புதுப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் 2 மாதங்கள் சலுகைகள் வழங்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு

இந்த நிலையில், தற்போது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மொத்தம் எத்தனை பேர் பதிவு செய்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி நிலவரப்படி,   18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 18 லட்சத்து 48 ஆயிரத்து 279 பேரும், அதேபோல் 19 முதல் 30 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்களை பொறுத்தவரையில் 28 லட்சத்து 09 ஆயிரத்து 415 பேரும் பதிவு செய்து உள்ளனர். 31 முதல் 45 வயது வரை அரசுப்பணி வேண்டி பதிவு செய்து காத்திருப்பவர்கள் எண்ணிக்கை 18 லட்சத்து 30 ஆயிரத்து 076 பேர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் : வேலைவாய்ப்பு இணையதளத்தில் நாளை முதல் பதிவு செய்யலாம்!

மேலும், 46 முதல் 60 வயது வரை வயது முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் 2 லட்சத்து 30 ஆயிரத்து 310 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5 ஆயிரத்து 602 பேர் பதிவு செய்து வேலைக்காக காத்து இருக்கின்றனர்.  மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரையில் கை, கால் குறைபாடுடையோர் ஆண்கள் 73 ஆயிரத்து 366 பேரும், பெண்கள் 38 ஆயிரத்து 029 உள்பட 1 லட்சத்து 11 ஆயிரத்து 395 பேரும், பார்வையற்ற ஆண்கள் 12 ஆயிரத்து 100 பேரும், பெண்கள் 5 ஆயிரத்து 484 பேர் உள்பட 17 ஆயிரத்து 584 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

காதுகேளாதோர் மற்றும் வாய் பேசாதோரில் ஆண்கள் 9 ஆயிரத்து 483 பேர், பெண்கள் 4 ஆயிரத்து 505 பேர் உள்பட 13 ஆயிரத்து 988 பேர் பதிவு செய்துள்ளனர்.. அதேப்போல், பட்டதாரி ஆசிரியர்கள் 3 லட்சத்து 41 ஆயிரத்து 615 பேரும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2 லட்சத்து 55 ஆயிரத்து 496 நபர்கள் என மொத்தம் 67,23,682 நபர்கள் பதிவு செய்து காத்திருப்பதாக வேலை வாய்ப்பு மற்றும் பதிவுத்துறை அறிவித்துள்ளது.