காய்ச்சலுக்கு ஊசி போட்ட 6 வயது குழந்தை உயிரிழப்பு- மருத்துவர் கைது

 
காய்ச்சலுக்கு ஊசி போட்ட 6 வயது குழந்தை உயிரிழப்பு

இராஜபாளையத்தில் காய்ச்சலுக்கு ஊசி போட்ட 6 வயது குழந்தை இறந்த நிலையில், இதில் தொடர்புடைய போலி  மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

3 வயது இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழப்பு | Minnal 24 News %

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வடக்கு மலையடிப் பட்டியை சேர்ந்தகூலி தொழிலாளி மகேஸ்வரனின் 6 வயதான கவி தேவநாதனுக்கு நேற்று காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே சம்மந்தபுரம் பகுதியில் தனியாக மருத்துவமனை நடத்தி வரும் அரசு மருத்துவர் பாஸ்கரனிடம் அழைத்து செல்லப்பட்டுள்ளார். காய்ச்சலுக்கு ஊசி போட்டு சிகிச்சை எடுத்துக் கொண்ட பின்னர், வீடு திரும்பிய பிறகு கவிநாதனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதுடன் அதிகமாக வியர்த்துள்ளது. மீண்டும் மருத்துவர் பாஸ்கரனிடம் சென்ற போது, சிறுவனை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு மருத்துவர் தெரிவித்துள்ளார்.

சிறுவனை தென்காசி சாலையில் உள்ள அரசு பொது மருத்துவ மனைக்கு தந்தை அழைத்து சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து மகேஸ்வரன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வடக்கு காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சிறுவன் இறந்த சம்பவம் குறித்து இன்று காலை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையின் மாவட்ட இணை இயக்குனர் டாக்டர். முருகவேல், சுகாதார பணிகள் துறையின் துணை இயக்குனர் கலு சிவலிங்கம், நகராட்சியின் நகர் நல அலுவலர் சரோஜா உள்ளிட்ட அதிகாரிகள் இறந்த சிறுவனின் வீட்டில் ஆய்வு நடத்தியதுடன், சிகிச்சை குறித்து உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதற்கு முன்னதாக, அருகே உள்ள பெண் மருந்தாளுனரிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டதாக அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. அந்த பெண் மருந்தாளுனர்  வீட்டுக்கு அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பெண் மருந்தாளுனரான ஆக்னெஸ்ட் கேத்ரின் என்பவர் முறையான படிப்பு இன்றி பல வருடங்களாக ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து ஜேடி புகாரின் பேரில் போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட போலி மருத்துவர் ஆக்னெஸ்ட் கேத்ரின் வீட்டில் இருந்து ஏராளமான ஆங்கில மாத்திரைகள், சத்து டானிக்குகள், வலி நிவாரணிகள், இருமல் மற்றும் காய்ச்சலுக்கான மருந்துகள், இன்சுலின் மற்றும் ஸ்ட்ரீராய்டு மருந்துகள், பயன்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படாத ஊசிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மருந்துகளின் தரம், காலாவதியாகும் தேதி உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து மருந்துகள் ஆய்வாளர் பால்ராஜா ஆய்வு நடத்தினார்.

மேலும் உடற்கூறு ஆய்வு வந்த பின்னரே சிறுவனின் இறப்பு குறித்த உண்மை தெரிய வரும் என கூறிய அதிகாரிகள், காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட நோய்களுக்கு போலி மருத்துவர்களை பொது மக்கள் அணுகாமல், அருகே உள்ள அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.