மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்! சத்து மாத்திரைகளை சாப்பிட்ட 6 மாணவிகள் மயக்கம்

 
dharmapuri

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஊராட்சி நடுநிலைப்பள்ளியில், வகுப்பறையில் இருந்து சத்து மாத்திரையை எடுத்து சாப்பிட்ட 6 மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் வட்டம் மேற்கு கிராமத்தில் உதகமண்டலம் நகராட்சி உருது நடுநிலைப்பள்ளியில் கடந்த 6.3.2023 அன்று 4 மாணவிகள் மற்றும் 2 மாணவர்கள் அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரையை உட்கொண்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 4 மாணவிகளும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஜெய்பா பாத்திமா என்ற மாணவி சென்னைக்கு உயர் சிகிச்சைக்காக அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாயும், சிகிச்சை பெற்று வரும் மாணவிகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டார். 

இந்நிலையில், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஊராட்சி நடுநிலைப்பள்ளியில், வகுப்பறையில் இருந்து சத்து மாத்திரையை எடுத்து சாப்பிட்ட 6 மாணவிகளூக்கு மயக்கம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பள்ளிப்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில், வகுப்பறை அலமாரியில் இருந்த சத்து மாத்திரைகளை மாணவிகள் எடுத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால் 6-ம் வகுப்பு படிக்கும் 6 மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டதையடுத்து, 5 மாணவிகள் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையிலும், ஒரு மாணவி தருமபுரி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். மாணவிகளின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.