நெல்லை அண்ணா பல்கலைகழகத்தில் முதுநிலை பட்டப்படிப்புகள் நிறுத்தம்.. மாணவர்கள் அதிர்ச்சி...

 
நெல்லை அண்ணா பல்கலை.

நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்தில் 6  முதுகலை பொறியியல் பட்டப்படிப்புகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கபப்ட்டுள்ளது.

நெல்லை  அண்ணா பல்கலைக்கழகத்தில், கடந்த 2009 ஆம் ஆண்டு 10 முதுகலை பொறியியல் படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. இங்கு முதுகலை பொறியியல் படிப்புகளில்,  டான் செட்  எனும் நுழைவுத் தேர்வு மூலம்   ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 25 மாணவர்கள் வீதம் ஆண்டுக்கு 250 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.  ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு முன்பு  4 முதுநிலை பொறியியல் பாடப்பிரிவுகள் நிறுத்தப்பட்டன.  தற்போது மீதமுள்ள 6 முதுநிலை படிப்புகளையும் நிறுத்த இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

நெல்லை அண்ணா பல்கலை

அதன்படி ஏரோநாட்டிகல் பொறியியல், பயன்பாட்டு பொறியியல், மின்னணுவியல் பொறியியல், கட்டமைப்புப் பொறியியல், தொலை உணர்வு பொறியியல், சுற்றுச் சூழல் பொறியியல் ஆகிய 6 முதுநிலை பட்டப் படிப்புகளும் நிறுத்தட இருக்கின்றன. இந்த 6 முதுநிலை படிப்புகளும் தென் மாவட்டங்களில் எந்தக் கல்லூரிகளிலும் நடத்தப்படவில்லை.. நெல்லை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது.

ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக முதுநிலை  பொறியியல்  படிப்புகளில் மாணவர் சேர்க்கை  இல்லை எனக்கூறி, இந்தப் பட்டப்படிப்புகள்  இந்த ஆண்டு முதல் நிறுத்தப்பட உள்ளதாக பல்கலை. செயலாளர் தெரிவித்திருக்கிறார். முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு தேவையான ஆய்வகங்கள், வகுப்பறைகள்  என அனைத்து வசதிகளும் நெல்லை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்  பயன்படுத்தும் வகையில் உள்ள நிலையில் பட்டப்படிப்புகள் நிறுத்தப்படுவது  தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.   

கல்லூரி மாணவர்கள்

பல்கலைக்கழகத்தின் இந்த முடிவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  இனி தென் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள்  முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர விரும்பினால்  சென்னை, கோவை என பெரு நகரங்களுக்கு செல்ல வேண்டும். எனவே தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.