ஒரே தொகுதியில் 6 பன்னீர் செல்வம் போட்டி..! ஓபிஎஸ்சுக்கு பின்னடைவை ஏற்படுத்த அதிமுக சதி..?

 
1

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.இவரை எதிர்த்து திமுக கூட்டணிக் கட்சியான முஸ்லீம் லீக்கின் மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி மீண்டும் களமிறங்குகிறார்.மேலும் அவரை எதிர்த்துப் போட்டியிட 5 பன்னீர்செல்வம் மனுக்களும் ஏற்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் புதன்கிழமை, ஒரு சின்ன மாற்றத்துடன் மற்றொரு பன்னீர்செல்வம் மனுத் தாக்கல் செய்துள்ளார். அவர் எம். பன்னீர்செல்வம். இவர் கடைசி நாளான மார்ச் 27 அன்று வேட்பு மனுத் தாக்கல் செய்திருக்கிறார். இவருடன் ராமநாதபுரத்தில் போட்டியிடும் பன்னீர்செல்வத்தின் எண்ணிக்கை ஆறு ஆக அதிகரித்துள்ளது.

ஓபிஎஸ்ஸுக்கு கிடைத்த ஆதரவை கண்டு எடப்பாடி பழனிசாமி வேண்டுமென்றே பல்வேறு பகுதிகளில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் என்று பெயருடைய நபர்களை வரவழைத்து வேட்புமனுத் தாக்கல் செய்ய வைத்துள்ளதாக ஓபிஎஸ்ஸின் மகன் ஜெயபிரதீப் குற்றம்சாட்டி இருந்தார்.

ஒரே பெயருடைய ஆறு பேர்  சுயேச்சையாக வெவ்வேறு சின்னத்தில் நிற்கும் பட்சத்தில் வாக்குகள் சிதறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஓபிஎஸ்சுக்கு போட்டியாக பன்னீர்செல்வம் பெயரில் மனுதாக்கல் செய்த 5 பேரும் நேற்று வேட்புமனு பரிசீலனைக்கு வரவில்லை. அவர்கள் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களில் 3 பேரை அதிமுகவினர் தங்களது கட்டுப்பாட்டில் தலைமறைவாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் வெளியில் தெரிந்தால் அவர்களின் வேட்புமனுக்களை வாபஸ் பெற வைக்க ஓபிஎஸ் தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்துவர் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இவர்களை வேட்புமனு வாபஸ் பெறும் நாளான நாளை 30ம் தேதி வரை தலைமறைவாக வைத்து, இறுதி வேட்பாளர் பட்டியலில் இடம் பெறச் செய்து ஓபிஎஸ்சுக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்த அதிமுகவினர் செயல்பட்டு வருகின்றனர் என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.