ரூ.70 கோடியில் மேலும் 6 இடங்களில் தோழி மகளிர் விடுதி

தமிழகத்தில் மேலும் 6 இடங்களில் 70 கோடி செலவில் 1200 பேர் தங்கும் வகையில் தோழி மகளிர் விடுதிகளை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு பணிக்கு வரும் பெண்கள், தனியார் விடுதிகளில் தங்கி பணிபுரிவதால் பொருளாதார ரீதியாகவும், பாதுகாப்பு சார்ந்தும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. இதற்கு தீர்வு கானும் வகையில் சமூகநலத்துறையின் கீழ் 19 மாவட்டங்களில் பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதிகள் மிகவும் குறைந்த வாடகையில் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதி நிறுவனம் (TNWWHCL) மூலம் புதிய விடுதிகளை உருவாக்கவும். ஏற்கெனவே உள்ள விடுதிகளை அனைத்து வசதிகளுடன் மேம்படுத்ததிட உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி தமிழகத்தில் தமிழகத்தில் மேலும் 6 இடங்களில் 70 கோடி செலவில் 1200 பேர் தங்கும் வகையில் தோழி மகளிர் விடுதிகளை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, சென்னையில் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் 24 கோடி செலவில் 500 பேர் தங்கும் வகையிலும், தரமணியில் 24 கோடி செலவில் 450 பேர் தங்கும் வகையிலும் விடுதிகள் அமைக்கப்பட உள்ளது. மேலும், ராமநாதபுரம் பட்டிணம்காத்தானில் 50 பேர் தங்கும் வகையில் 3.61 கோடியிலும், திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியில் 50 பேர் தங்கும் வகையில் 3 கோடியிலும் புதிய விடுதிகள் அமைக்கப்படவுள்ளது. இதைத் தவிர்த்து கிருஷ்ணகிரி மாவட்டம் போலுபள்ளி, கோவை மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சுமார் 16 கோடி செலவில் 150க்கு மேற்பட்டவர்கள் தங்கும் வகையில் புதிய அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு காவல் வீட்டு வசதி கழகம் டெண்டர் கோரியுள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்ட பின்பு விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.