காய்ச்சலால் 6 மாத குழந்தை உயிரிழப்பு! திருவள்ளூரில் சோகம்
திருவள்ளூர் அருகே காய்ச்சலால் 6 மாத பெண் குழந்தை பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளுர் அடுத்த வெள்ளியூர் பாரதியார் நகர் சேர்ந்தவர் தியாகராஜன் - ஆனந்தி. இத்தம்பதியின் 6 மாத கைக்குழந்தை ஜோதிகா ஸ்ரீ -க்கு காய்ச்சல், சளி ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று காலை வெள்ளியூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு குழந்தைக்கு காய்ச்சல். சளிக்கு இரண்டு மருந்து கொடுத்து வீட்டிற்கு அனுப்பி உள்ளனர். குழந்தையின் தாய் குழந்தைக்கு மருத்துவமனையில் கொடுத்த மருந்தை கொடுத்து தூங்க வைத்துள்ளார். பின்னர் குழந்தை மூச்சுப் பேச்சின்றி இருந்ததை தொடர்ந்து திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குழந்தையை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை கூட பிறகு அனுப்பி வைத்தனர். குழந்தை இறப்பு தொடர்பாக வெங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய்ப்பால் சுரக்காததால் புட்டி பால் குழந்தைக்கு தாய் கொடுத்து வந்திருப்பதும் அதன் பின் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டு இருப்பதும் போலீசார் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குழந்தை காய்ச்சலால் தான் இறந்ததா அல்லது வேறு ஏதாவது காரணத்தால் இறந்ததா என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கப் பெற்றாலே முழு விவரம் தெரிய வரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுள்ளது.


