தமிழக மீனவர்கள் 6 பேர் கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது - அன்புமணி ட்வீட்!!

 
pmk

தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் 23 பேரையும் மீட்க  மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

fisher

ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் விசைப்படகுகளில் சுமார் 500 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்று இருந்தனர்.  கச்சதீவுக்கும் கோடியகரைக்கும் இடைப்பட்ட நடுக்கடலில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது  எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் புதுக்கோட்டையை சேர்ந்த 6  மீனவர்களை கைது செய்தனர்.  அத்துடன் அவர்களின் படகு ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.  கைது செய்யப்பட்ட 6 மீனவர்கள் தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.



இந்நிலையில் பாமக  தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "வங்கக்கடலில் கச்சத்தீவுக்கும்,  கோடியக்கரைக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 6 பேரை அவர்களின் விசைப்படகுடன் சிங்களக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது!கடந்த 10 நாட்களில்,  மூன்றாவது முறையாக தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர்.  சிங்களக் கடற்படையினரின் இந்த தொடர் அத்துமீறலை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. சிங்கள அரசை கடுமையாக கண்டிக்க வேண்டும்!கடந்த சில நாட்களில் கைது செய்யப்பட்ட தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் 23 பேரையும், அவர்களின் படகுகளுடன் மீட்க  மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த காலங்களில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளையும்  விரைந்து மீட்க வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.