தமிழகம் முழுவதும் 56 ஆயிரம் சிம் கார்டுகள் முடக்கம் - சைபர் க்ரைம் போலீஸார் நடவடிக்கை..

 
தமிழகம் முழுவதும்  56 ஆயிரம் சிம் கார்டுகள் முடக்கம் - சைபர் க்ரைம் போலீஸார் நடவடிக்கை.. 

தமிழகத்தில் 56 ஆயிரம் சிம் கார்டுகள் போலி ஆவணங்கள் கொடுத்து வாங்கப்பட்டதாக முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக  5 பேரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

போலி செல்போன் அழைப்புகள் மூலம் நாள்தோறும் ஏராளமான மோசடிகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்களும் அதிகம் அரங்கேறி வருகின்றன. இதுபோன்ற குற்ற சம்பவங்களுக்கு பல செல்ஃபோன் எண்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் குற்றவாளிகளை பிடிப்பது சைபர் கிரைம் போலீஸாருக்கு கடும் சவாலாக அமைந்துள்ளது. காரணம் அந்த செல்போன் எண்கள் அனைத்தும் போலி ஆவணங்கள் மூலம் வாங்கப்பட்டது ஆகும். 

arrest

இருப்பினும் இது தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் இருப்பதால்,  மாநில சைபர் கிரைம் போலீஸார் நடவடிக்கை தொடங்கி, விவரங்களைச் சேகரித்து வந்தனர். அதன்படி புகார்கள் வந்துள்ள செல்போன் எண்களின் விவரங்களை, அந்தந்த சிம் கார்டு நிறுவனங்களுக்கு அனுப்பி அவற்றை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி, இதுவரை 55 ஆயிரத்து 982 சிம் கார்டுகளை சைபர் கிரைம் போலீஸார் முடக்கியுள்ளனர். அதேநேரம், இதுபோன்ற போலி ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு சிம் கார்டுகளை விற்கும் நபர்களைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையிலும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.  

அதன்படி, இந்த சிம் கார்டுகள் எந்த விற்பனை பிரதிநிதியிடமிருந்து வாங்கப்பட்டவை, எந்த நிறுவனத்தின் சிம் கார்டுகள் என விசாரித்து மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகத்துக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் அடிப்படையில், நடவடிக்கை மேற்கொள்ளலாம் என மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் மாநில சைபர் கிரைம் போலீஸாருக்கு பரிந்துரை செய்துள்ளது.  அப்படி தமிழகம் முழுவதும் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 5 விற்பனை பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.