சென்னையில் 547 வாகனங்கள் பறிமுதல்.. இரவு நேர ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதால் காவல்துறை நடவடிக்கை..

 
இரவு நேர ஊரடங்கு

சென்னையில் இரவு நேர ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 547 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா தினசரி பாதிப்பு ஒரு லட்சத்தை  தொட்டு விட்டது. மூன்றாவது அலையாக  தாக்கிக்கொண்டிருக்கும் கொரோனாவுடன், ஒமைக்ரானும் சேர்ந்துகொண்டு பாடாய்படுத்தி வருகிறது..  இந்த வைரஸ்களில் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள,  பல்வேறு  மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு , பள்ளி கல்லூரிகள் மூடல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

night Curfew

அந்தவகையில் தமிழகத்தில்  புதிய கொரோனா  ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  ஞாயிறு முழு ஊரடங்கு,  இரவு நேர ஊரடங்கு,  வெள்ளி, சனி, ஞாயிறுகளில்  கோயில்களில் பக்தர்களுக்கு தடை, பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு, கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்டவை அடங்கும். அதில் இரவு நேர ஊரடங்கு நேற்று  இரவு 10 மணி முதல் அமலுக்கு வந்தது.  அதிகாலை 5 மணியுடன் இந்த ஊரடங்கு நிறைவடைந்தது.  இந்த ஊரடங்கு நேரத்தில்  சென்னையின் பல முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இரவு நேர ஊரடங்கு

இருப்பினும் தடையை மீறி ஏராளமான பொதுமக்கள் வெளியே வந்தனர். ஆங்காங்கே ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர்களை  மடக்கிப் பிடித்து வாகனங்களை பறிமுதல் செய்தனர். அப்படி 501 இருசக்கர வாகனங்கள், 32 ஆட்டோக்கள், 14 இலகுரக வாகனங்கள்  என தடையை மீறி வெளியே சுற்றிய 547 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.