"ஜால்ட்ரா போடுவோருக்கும், பணம் கொடுத்து பொறுப்பு வாங்குபவர்களுக்குமே முன்னுரிமை"- நாதகவில் இருந்து 500 பேர் விலகல்

மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியினர் சுமார் 500 பேர் விலகிக் கொள்வதாக நாம் தமிழர் கட்சியில் பணியாற்றி வந்த சேலம் வடக்கு மாவட்ட மேட்டூர் சட்டமன்ற தொகுதி துணைத் தலைவர் ஜே.ரகு தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் துணை தலைவராக ஜே.ரகு ஆகிய நான் கட்சியிலிருந்து 500 உறுப்பினர்கள் அனைவரும் மாற்று பொறுப்பில் இருந்த அடிப்படை உறுப்பினர்கள் அனைவரும் விலகி கொள்வதாக தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “கட்சியில் ஏழு ஆண்டுகளாய் பணியாற்றி என்னுடைய இளமை காலங்களை மற்றும் பண உழைப்பு அனைத்தையும் இழந்துவிட்டேன். கட்சியை குறை சொல்லி வெளியேறுவது ஒரு வீரனுக்கும், களப்போராளிக்கும் அழகு இல்லை. ஆனால் கட்சியில் மாநில பொறுப்பில் இருந்து பாக்கியராஜ் மற்றும் எங்கள் தொகுதியின் முன்னாள் தொகுதி செயலாளர் மணிவண்ணன் ஆகியோர்களால் வெளியே செல்லும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.
இன்னும் வரவிருக்கும் பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், நகர பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள் என அனைவரும் வெளியே செல்வார்கள் என்பதை கவனிக்கவும். ஜால்ட்ரா போடும் நபர்களுக்கும், பணம் கொடுத்து பொறுப்பு வாங்குபவர்களுக்கும் தான் இந்த கட்சியில் முன்னுரிமை உழைப்பாளர்களுக்கு இல்லை. நாம் தமிழர் என்று இல்லாமல் நான் மட்டுமே தமிழர் என தொகுதி செயலாளர் மணிவண்ணன் செயல் படுகிறார்.
நீ எந்த ஜாதி? அவன் எந்த ஜாதி? என்று ஜாதியை பார்த்தும் எவனிடம் பணம் உள்ளது என்பதை பார்த்துமே பொறுப்பு கொடுக்கிறார்கள், இவர்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை உண்மையான உழைப்பாளிகள் வெளியே செல்கிறார்கள். நான் செல்லும் பாதை நேர்மையானதா என்று தேர்ந்தெடுத்து அந்த பாதையில் பயணிப்பது என்னுடைய குணம் மிகுந்த வருத்தத்துடன் வெளியே செல்கிறேன். இனிமேலாவது தொகுதியில் உழைத்த உண்மையான போராளிகள் கண்டு பொறுப்பை கொடுங்கள் நன்றி!” எனக் குறிப்பிட்டுள்ளார்.