5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகளுக்கு வேளாண் கருவிகளுக்கு 50% மானியம்! முழு விவரம்!

 
1

'வேளாண்மை இயந்திரமயமாக்கும் துணை இயக்க திட்டம்' என்ற சிறப்பு திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்குத் தேவையான கருவிகளை வாங்க 50% வரை மானியம் வழங்கப்படுகிறது. 

யாருக்கு எவ்வளவு மானியம்?

  • இத்திட்டத்தின் கீழ் தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு வெவ்வேறு அளவுகளில் மானியம் வழங்கப்படுகிறது.
  • 2.5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் குறு விவசாயிகள் மற்றும் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகளுக்கு, இயந்திரத்தின் மொத்த விலையில் 50% மானியமாக வழங்கப்படும்.
  • பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கும் 50% மானியம் உண்டு. இவர்களில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்குக் கூடுதலாக 20% மானியம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
  • மேற்கண்ட பிரிவுகளில் வராத மற்ற விவசாயிகளுக்கு, இயந்திரத்தின் விலையில் 40% மானியமாக வழங்கப்படும். கிராமப்புறங்களில் வேளாண் இயந்திரங்களுக்கான வாடகை மையங்களை அமைக்க 80% வரையும், வட்டார அளவில் மையங்கள் அமைக்க 40% வரையும் மானியம் வழங்கப்படுகிறது.

என்னென்ன இயந்திரங்களுக்கு மானியம்?

உழவு பணியில் தொடங்கி, அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பங்கள் வரை பலவிதமான இயந்திரங்களுக்கு இத்திட்டத்தில் மானியம் பெறலாம். டிராக்டர்கள், பவர் டில்லர்கள், நெல் நடவு இயந்திரங்கள், களையெடுக்கும் கருவிகள், கதிரடிக்கும் இயந்திரங்கள், கரும்பு சோகை அரைக்கும் கருவிகள், தேங்காய் மட்டை உரிக்கும் இயந்திரம் மற்றும் மதிப்புக்கூட்டும் இயந்திரங்களான மாவு அரைக்கும் இயந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு போன்ற பல கருவிகள் இந்த பட்டியலில் அடங்கும்.

விண்ணப்பிப்பது எப்படி?

இத்திட்டத்தில் மானியம் பெற விரும்பும் விவசாயிகள், தங்களது ஸ்மார்ட்போனில் 'உழவன்' செயலியை (Uzhavan App) பதிவிறக்கம் செய்து, அதில் தங்களது விவரங்களை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், நிலத்தின் சிட்டா, பட்டா மற்றும் புகைப்படம் ஆகியவை முக்கிய தேவையான ஆவணங்கள் ஆகும். ஆன்லைனில் விண்ணப்பிக்க தெரியாதவர்கள், அருகில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்திற்கு சென்றும் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.