ராசிபுரம் அருகே 80 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து 5 வயது சிறுவன் பலி
ராசிபுரம் அருகே 80 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து 5 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மாவட்ட சின்ன அரியா கவுண்டம்பட்டி சேர்ந்தவர் பரமசிவம் (வயது 39). லாரி டிரைவரான இவருக்கு, திருமணமாகி நந்தினி (29) என்ற மனைவியும், சுஸ்மிதா என்ற மகளும், ரித்விக் என்ற 5 வயது குழந்தையும் இருந்தனர். இதனிடையே இன்று வீட்டின் அருகே அப்பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவருடன், சிறுவன் ரித்விக் விளையாடி கொண்டிருந்தபோது, அங்குள்ள 80 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. அதை பார்த்த மற்ற சிறுவர்கள் பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் கிணற்றுக்குள் இறங்கி சிறுவனை மீட்க முற்பட்டும் முடியாததால், ராசிபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு நிலைய அலுவலர் பலகார ராமசாமி தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவன் ரித்விக் சடலமாக மீட்டப்பட்டதால், கிராமமே சோகத்தில் மூழ்கியது.
தகவல் அறிந்த நாமகிரிப்பேட்டை போலீசார் சிறுவனை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், சிறுவன் ரித்விக் அப்பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவருடன் பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றை வைத்து விளையாடியதும், அந்த பாட்டில் அங்குள்ள கிணற்றை மூடியபடி அமைக்கப்பட்டு இருந்த கம்பி வேலியின் மீது போடப்பட்டு இருந்த சிமெண்ட் அட்டை மேலே விழுந்ததும் தெரியவந்தது. மேலும், அதை எடுப்பதற்காக கிணற்றின் மீது சிறுவன் ஏரியபோது, சிமெண்ட் அட்டையை ஒட்டி இருந்த தகர சீட்டு நகர்ந்ததால் சிறுவன் ரித்விக் 80 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்ததாக முழ்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதேபோல் குடியிருப்பு பகுதியின் மத்தியில் உள்ள கிணற்றிற்கு சுமார் 1½ அடி உயரத்தில் சுற்றுச்சுவர் அமைத்திருப்பதால் விபத்து நடந்திருப்பதாக தெரிவித்த நாமகிரிப்பேட்டை போலீசார், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

