தெலங்கானாவில் கோர சாலை விபத்து: டேங்கர் லாரி - ஆட்டோ மோதியதில் 5 பெண்கள் உட்பட 6 பேர் பரிதாப பலி!
தெலங்கானா ஜகீராபாத் சத்வார் கிராமப் பகுதியில் கோர சாலை விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. அருகிலுள்ள கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளர்கள் வேலை முடிந்து ஆட்டோவில் தங்களது கிராமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராவிதமாக வந்த டேங்கர் லாரி ஒன்று ஆட்டோ மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உட்பட 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். ஆட்டோவில் பயணித்த 12 பேரில் எஞ்சிய 6 பேர் பலத்த காயமடைந்து உடனடி மீட்புப் படையினரால் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக ஜகீராபாத் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மேலும் சிலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உள்ளூர் காவல்துறையினரும் பொதுமக்களும் உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். விபத்துக்குள்ளான வாகனங்களை அகற்றி அப்பகுதியில் போக்குவரத்து சரிசெய்யப்பட்டது. மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கட்டுப்பாட்டை இழந்து மோதிய டேங்கர் லாரி மற்றும் அதன் ஓட்டுநரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பலியானவர்கள் அனைவரும் தினமும் பிழைப்பிற்காக எல்லை தாண்டி கூலி வேலைக்கு வந்து செல்லும் ஏழைத் தொழிலாளர்கள் என்பதால், இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

