ஒரே தூணில் 5 தண்டவாளங்கள்- உலகிலேயே முதன் முறையாக சென்னை மெட்ரோ சாதனை

உலகிலேயே முதல்முறையாக, சென்னையில் ஒரே தூணில் ஐந்து ரயில் தண்டவாளங்களுடன் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பூந்தமல்லி புறவழிச் சாலையிலிருந்து வடபழனி வரை 15 கிலோமீட்டர் தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், ஆற்காடு சாலைப் பகுதியில் சுரங்கப் பாதை மூலம் திட்டத்தை மேற்கொள்ள மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டது. இதற்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் நிதி சுமை ஏற்படும் என்பதால், குறுகிய பாதையான வடபழனி முதல் போரூர் வரை உள்ள 4 கிலோமீட்டர் தொலைவுக்கு ஒரே தூணில் நான்கு ரயில்கள் வந்துசெல்லவும், ரயில்கள் இடமாற்றிக் கொள்ளவும் ஒரு லூப் லைனும் சேர்த்து 5 தண்டவாளங்கள் இரட்டை அடுக்குகளாக அமைக்கப்படுகின்றன. மேலும், இதற்கான ரயில் நிலையங்களும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த எடையைத் தாங்கும் வகையில், 75 மீட்டர் அளவுக்கு பூமியில் புதைக்கப்பட்டு தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
வழித்தடம் 4 மற்றும் 5 ஆகிய இரண்டும் சந்திக்கும் இடமாகவும் இது அமைக்கப்படுகிறது.. இதில் கீழே இரண்டு தண்டவாளங்கள் 4ஆவது வழித்தடத்திற்காகவும் மேலே 2 தண்டவாளங்கள் 5ஆவது வழித்தடத்திற்காகவும் அமைக்கப்படுகின்றன, இதில் மிக முக்கியமானது ஒரு மெட்ரோ ரயில் மேல் இன்னொரு மெட்ரோ ரயில். உலகத்திலேயே முதல்முறையாக நாம் தான் இப்படி கட்டுகிறோம். இதில் மிகப்பெரிய சவால் ஆற்காடு ரோடில், 4 கி.மீ-க்கு 4 ரயில் நிலையங்கள் கொண்ட நீளமான பாதை அமைய உள்ளது.