கிரில் சிக்கன் சாப்பிட்ட 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

மதுரை மாவட்டம் சோழவந்தானில் கிரில் சிக்கன் சாப்பிட்ட 20- க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் தென்கரை பாலம் அருகே அமைந்துள்ளது பிரீட்டா எனும் உணவகம். இந்த உணவகத்தில் நேற்று இரவு கிரில் சிக்கன் மற்றும் தந்தூரி சிக்கன் வாங்கி சாப்பிட்ட சுமார் 22 பேருக்கு நள்ளிரவு முதல் வாந்தி, பேதி கோளாறு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சோழவந்தனை சேர்ந்த பிரசன்னா என்ற இளைஞர் தனது நண்பர்கள் 10 பேருடன் சேர்ந்து அந்த உணவகத்தில் சிக்கன் வாங்கி சாப்பிட்டுள்ளார். அந்த 10 பேருக்குமே உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து வாந்தி, பேதி கோளாறால் பாதிக்கப்பட்ட அனைவரும் சோழவந்தான் அரசு மருத்துவமனை மற்றும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர். தற்போது சோழவந்தான் அரசு மருத்துவமனையில் மூன்று வயது குழந்தை உட்பட ஆறு பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சம்பந்தப்பட்ட உணவகத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அதேபோன்று சோழவந்தான் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.