நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி..!
மதுரை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டுள்ளனர். கோவிலில் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு, அவர்கள் காரில் மீண்டும் மதுரை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர்.
கார் திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் அய்யாபட்டி பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தின் வீரியத்தில், காரில் பயணித்த ஐந்து பேருமே சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக அருகில் உள்ள மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் மேலூர் வட்டாரத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

