வாசலில் 5, பூஜையறையில் 2, வெளியில் 1 யம தீபம் – வீட்டில் 27 தீபங்கள் ஏற்றி வழிபடும் எளிய வழிமுறை!
கார்த்திகை மாதம் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபமும், வீடுகள்தோறும் ஏற்றப்படும் தீபங்களும் தான். இந்துக்களின் வழிபாட்டு முறையில் தீபம் ஏற்றி வழிபடுவது என்பது மிக முக்கியமான மற்றும் சக்தி வாய்ந்த வழிபாடாக பார்க்கப்படுகிறது. சாதாரணமாக இறைவனை வழிபடுவதும், மந்திர ஜபம் செய்வதையும் விட ஒரே ஒரு அகல் விளக்கை இறைவன் முன்பு ஏற்றி வைத்து, வழிபட்டாலும், மந்திர ஜபம் செய்தாலும் இரு மடங்கு பலன் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. இறைவன் ஜோதி ரூபமானவன். அவனுக்கு உருவம் கிடையாது. இறைவன் பஞ்சபூதங்களின் வடிவமாக எங்கும் நிறைந்திருக்கிறான். யார் எந்த வடிவத்தில் நினைத்து வழிபடுகிறாரோ அவருக்கு அந்த வடிவத்திலேயே இறைவன் அருள் செய்து, காட்சி தருவதாக இந்து சமய சாஸ்திரங்கள் சொல்கின்றன.
இறைவன் ஜோதி வடிவமானவன் என்ற உண்மையை உலகிற்கு உணர்த்துவதற்காக, பிரம்மாவிற்கும், மகாவிஷ்ணுவிற்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்ட போது அடிமுடி காண முடியாத அண்ணாமலையாராக பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும், முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் ஈசன் ஜோதி ஸ்வரூபமாக காட்சி அளித்த திருநாள் தான் கார்த்திகை மாத பெளர்ணமி. இதை போற்றும் விதமாகவே இந்த நாளில் திருக்கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்படுகிறது. அதே போல் மகாவிஷ்ணு உலகை காப்பதற்காக ஜோதி வடிவமாக தோன்றியதும் கார்த்திகை மாதத்தில் தான் என்பதால் அதன் நினைவாக வைணவ தலங்களில் பாஞ்சராத்திர தீபம் ஏற்றி வழிபடப்படுகிறது.
கார்த்திகை தீபத் திருநாள் என்று திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் உள்ள அண்ணாமலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்ட பிறகு, அதனை தரிசித்து விட்டு, மாலை 6 மணிக்கு பிறகு வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். அதாவது, திருவண்ணாமலையில் ஜோதி வடிவமாக காட்சி தந்த சிவ பெருமான், நம்முடைய வீடுகளிலும் எழுந்தருளி, நமக்கு அருள் செய்ய வேண்டும் என்பதற்காக வீடுகளிலும் விளக்கேற்றும் வழக்கம் உள்ளது
* வீட்டின் அளவும், அமைப்பும் எப்படி இருந்தாலும் மொத்தமாக 27 விளக்குகள் ஏற்றுவதே சரியான முறை. அதற்கு மேல் விருப்பம் போல் அதிகபட்சம் 100 விளக்குகள் வரை ஏற்றலாம். ஆனால் குறைந்த பட்சம் 27 விளக்குகள் கண்டிப்பாக ஏற்ற வேண்டும். இந்த எண்ணிக்கை 27 நட்சத்திரங்களை குறிப்பதாகும்.
* மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் அல்லது பஞ்சகூட்டு எண்ணெய் இட்டு, பஞ்சு திரியால் விளக்கேற்ற வேண்டும்.
* குறைந்தபட்சம் ஒரே ஒரு விளக்காவது நெய் தீபமாக ஏற்ற வேண்டும். இந்த நெய் தீபத்தை பூஜை அறையில் உள்ள சாமி படத்திற்கு முன் ஏற்றுவது சிறப்பு.
* ஒரு முறை விளக்கேற்றிய பிறகு அதை அடிக்கடி தூண்டி விடவோ, எண்ணெய் ஊற்றிக் கொண்டோ இருக்கக் கூடாது. அது தானாக குளிரும் வரை அப்படியே விட்டு விட வேண்டும்.
* அகல் விளக்காக இருந்தாலும் வெறும் தரையில் வைக்கக் கூடாது. வாழை, அரசு, செம்பருத்தி, வெற்றிலை என சுபிட்சத்தை தரும் ஏதாவது ஒரு இலை மீது வைத்து தான் ஏற்ற வேண்டும்.
* முதலில் வாசலில் கோலத்தின் மீது வைத்த விளக்கு, பிறகு நிலை வாசலில் வைத்த விளக்கை ஏற்ற வேண்டும். அங்கிருந்து ஒரு அகல் விளக்கை எடுத்து வந்து வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றி விட்டு, அதற்கு பிறகு தான் மற்ற இடங்களில் விளக்கேற்ற வேண்டும்.
எந்த இடத்தில் எத்தனை விளக்கு வைக்க வேண்டும்?
* வாசல் கோலத்தின் மீது - 5 விளக்குகள் (குத்துவிளக்கை 5 அகல் விளக்கு ஏற்ற வேண்டும்)
* நிலை வாசல் - 2 விளக்குகள்
* வாசல்படி - 4 விளக்குகள்
* திண்ணை, மாடம் அல்லது ஜன்னல் - 6 விளக்குகள்
* வீட்டின் நடுக்கூடம் - 2 விளக்குகள்
* பூஜை அறை - 2 தீபம்
* சமையல் அறை - 2 தீபம்
* வீட்டின் பின்புறம் - 3 விளக்குகள்
* வீட்டிற்கு வெளியில் யம தீபம் - 1 விளக்கு

