தங்கும் அறையிலேயே கஞ்சா வளர்த்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது

கோவை மாநகரில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் புழக்கத்தை தடுக்கும் வகையில் போலீசார் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக காவல் ஆணையர் சரவணசுந்தர் உத்தரவின் பேரில் மாநகரில் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தங்கும் விடுதிகளில் அடிக்கடி போலீசார் திடீர் சோதனை ஈடுபட்டு வருகின்றனர். அப்போது கல்லூரி மாணவர்களின் அறைகளில் தங்கி சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்களையும் கண்டறிந்து கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் ஈச்சனாரி, குனியமுத்தூர், கோவைப்புதூர், உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகளில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குனியமுத்தூர் காவல் நிலையத்திற்க்குட்பட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கி இருந்த தனியார் தங்கும் விடுதிகள், வீடுகளில் சோதனை போலீசார் சோதனையிட்டனர். அப்போது, கல்லூரி மாணவர்கள் தங்கி இருந்த வீட்டின் மாடியில், கஞ்சா செடிகளை மாணவர்கள் வளர்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து, அங்கு பயிரிடப்பட்ட 22 கஞ்சா செடிகளை போலீசார் பறிமுதல் செய்து, கஞ்சா செடியை வளர்த்து வந்த கல்லூரி மாணவர்களான கேரளா மாநிலம் கோழிகோட்டை சேர்ந்த விஷ்ணு (19), தனுஷ் (19), அவினவ் (19), அனுருத் (19) அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கலைவாணன் (21), ஆகிய 5 பேரை கைது செய்துள்ளனர். இவர்கள் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். மேலும் இடைத் தரகர் மூலம் கஞ்சாவை வாங்கி பயன்படுத்தியதும், அப்போது அதில் இருந்த விதையை எடுத்து அறையிலேயே கஞ்சா செடிகளை வளர்த்ததும் தெரியவந்தது. மேலும் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதால், செடிகளை அறையிலேயே வளர்த்து, தங்களது பயன்பாட்டிற்காக தயாரிக்க முடிவு செய்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 5 கல்லூரி மாணவர்களை கைது செய்த போலீசார், மாணவர்களுக்கு கஞ்சாவை சப்ளையும் செய்யும் நபர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 5 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.