பெரும் பரபரப்பு...வேங்கைவயலுக்குள் நுழைய முயன்ற 5 பேர் கைது!

வேங்கைவயலுக்குள் நுழைய முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு பல மாதங்களுக்கு பிறகு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிக்கையில் உடன்பாடில்லை என அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன. இதனிடையே வேங்கைவயல் சம்பவத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை தொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. வேங்கைவயல் சம்பவத்தில் தனிப்பட்ட விரோதம் காரணமாகவே 3 பேர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். முரளிராஜா, சுதர்ஷன், முத்தையா, முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோரின் செல்ஃபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் பகுப்பாய்வு செய்யப்பட்டது. செல்ஃபோன்களில் இருந்து அழிக்கப்பட்ட உரையாடல்கள், புகைப்படங்கள் மீட்கப்பட்டு இச்சம்பவத்தில் அவர்களது தொடர்பு உறுதி செய்யப்பட்டது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இருந்த போதிலும் வழக்கை சிபிஐக்கு மாற்ற அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், வேங்கைவயலுக்குள் நுழைய முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கைவயலுக்குள் வெளியாட்கள் நுழைய காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. 9 சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. மீறி நுழைய முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த மூவரும் உண்மையான குற்றவாளிகள் அல்ல எனக்கூறி குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என வேங்கைவயல் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.