தேர்வு மையத்தில் உள்ளாடையை அகற்ற கட்டாயப்படுத்திய விவகாரம் - 5 பெண்கள் கைது

 
arrest

கேரளாவில், நீட் தேர்வு மையத்தில் மாணவியரின் உள்ளாடைகளை அகற்ற கட்டாயப்படுத்தியது தொடர்பாக 5 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இந்நிலையில் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் உள்ளாடைகளை கழற்ற சொல்லி, அதன்பின் தேர்வு எழுத அனுமதித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அயூரில் உள்ள தேர்வு மையத்தில் இந்த கொடுமை நடந்துள்ளது. சூரநாட்டை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் அப்பகுதி காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில், தேர்வு மைய நுழைவாயிலில் உள்ளாடைகளை கழற்றி சோதனை செய்து, ஆடைகளையும் சோதனை செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனக்கு மட்டுமின்றி அங்குவந்த மாணவர்கள் அனைவருக்கும் இதுபோன்ற சோதனை நடத்தப்பட்டதாகவும், மாணவர்களின் உள்ளாடைகள் பெறப்பட்டு அவற்றை இரண்டு அறைகளில் வைத்திருந்ததாகவும் பாதிக்கப்பட்ட மாணவி  தெரிவித்திருந்தார். 

neet

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் குறித்து உண்மை கண்டறியும் குழுவை மத்திய கல்வி அமைச்சகம் அமைத்துள்ளது. இந்த நிலையில், மாணவிகளின் உள்ளாடையை கழற்றிய விவகாரம் தொடர்பாக 5 பெண்களை கொல்லம் போலீசார் கைது செய்து பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.