நின்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தின் மீது மோதிய லாரி - 5 பேர் பலி

 
accident

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நின்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தின் பின்னால் அதிவேகமாக வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

 சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஏழு பேர், சென்னைக்கு செல்வதற்காக, நள்ளிரவு, 12:00 மணியளவில் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்துகாக நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் புக்கிங் செய்த தனியார் ஆம்னி பேருந்து ஒன்று அங்கு வந்த நிலையில், அந்த 7 பேரும் தங்களது  உடமைகளை பேருந்தில் ஏற்றிக்கொண்டிருந்தனர்.  இந்த சமயத்தில், சேலத்தில் இருந்து, ஆத்தூர் நோக்கி அதிவேகமாக வந்த டாரஸ் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆம்னி பேருந்தின் மீது மோதியது. இதில் பின்னால் இருந்த ஏழு பேருக்கு பயங்கர சேதம் ஏற்பட்டது.  இந்த கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மேலும், இருவர் படுகாயம் அடைந்த நிலையில், அவர்களுக்கு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.