கள்ளச்சாராயம் தொடர்பாக 4,968 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது- தமிழக அரசு
2024-ஆம் ஆண்டில் கள்ளச்சாராயம் தொடர்பாக 4968 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக காவல்துறையின் கொள்கை விளக்க குறிப்பில், “கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுக்க மாவட்ட காவல் துறையுடன் மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் வருவாய் துறையினரால் அடிக்கடி சிறப்பு சோதனைகள் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டில் சாராயம் காய்ச்சுதல் தொடர்பாக 12,868 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12,856 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 5.54 லட்சம் லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் மே மாதம் வரை 49 68 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4959 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 1.48 லட்சம் லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுவிலக்கு அமலாக்க துறையின் மூலம் 2023 ஆம் ஆண்டில் 1.51 லட்சம் மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1.50 லட்சம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 24 கோடி மதிப்பிலான கடத்தல் பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

மதுவிலக்கு அமலாக்க துறையின் மூலம் 2024 ஆம் ஆண்டில் 74,491 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 73,680 லட்சம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 11 கோடி மதிப்பிலான கடத்தல் பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


