அங்கீகாரம் வழங்க பல கோடி ரூபாய் லஞ்சம் - 47 தனியார் பள்ளிகள் புகார்
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்குப் அங்கீகாரம் வழங்க பல கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்ட விவகாரத்தில் ரூ.100 கோடி மோசடி நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் தடையில்லா சான்று வழங்க திமுக ஆட்சியில் 100 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டதாக புகார்கள் எழுந்தன. போலீஸ் விசாரணையில் இது உண்மை என்று தெரியவந்ததால் பணம் வசூலித்து ஏமாற்றிய திமுக செய்தித்தொடர்பு அணி மாநில நிர்வாகி பிடி அரசகுமார் கைது செய்யப்பட்டார். இந்த முறைகேட்டில் மேலும் பல திமுக புள்ளிகள் பெயர்களும் அடிபடுகின்றன. அதேசமயம் புகார் அளிக்க முன்வரும் தனியார் பள்ளி நிர்வாகிகளை திமுக புள்ளிகள் மிரட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் போதிய பாதுகாப்பு தருவதாக காவல்துறை கூறி நம்பிக்கை ஏற்படுத்தி வருகிறது.
இதுவரை 47 பள்ளிகளிடம் ரூ.7 கோடிக்கு மேல் மோசடி புகார் வந்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாக பல கோடி பணம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மோசடி பணத்தில் எங்கெல்லாம் சொத்துக்கள் வாங்கியுள்ளனர் என விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. ஏமாந்தவர்களின் பட்டியலை திரட்டும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இப்புகாரில் தனியார் பள்ளிகள் சங்க தலைவர் அரசகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

