லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான ரூ.457 கோடி சொத்துகள் முடக்கம்

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு தொடர்புடைய மேலும் 457கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இதுவரை 908 கோடி ரூபாய் சொத்துகளை முடக்கப்பட்டுள்ளன.
தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் சிக்கிம், மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் லாட்டரி விற்பனை சில விதிகளுக்குட்பட்டு அனுமதிக்கப்பட்டு இருப்பதால், லாட்டரி விற்பனையில் மார்ட்டின் என்கிற கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் முக்கிய நபராக இருந்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்து, கடந்த 2009 - 2010 காலக்கட்டத்தில் சிக்கிம் மாநில லாட்டரி விதிகளை மீறி 910 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும், அந்த வருவாயை 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மாற்றி முதலீடு செய்திருப்பதாக வருமான வரித்துறை குற்றம் சாட்டியது. அதனடிப்படையில் கேரள மாநிலம் கொச்சி அமலாக்கத்துறை சட்டவிரோத பணப் பரிமாற்றத்திற்கு மார்ட்டின் மற்றும் அவரது பங்குதாரர் ஜெயமுருகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தது.
During the searches, movable / immovable properties worth Rs. 457 Crore (approx.) in the form of FD, Mutual Funds and immovable property documents were seized/freezed.
— ED (@dir_ed) May 15, 2023
இது தொடர்பாக லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி, பல்வேறு கட்டங்களாக லாட்டரி அதிபர் நடத்தி வரும் நிறுவனங்கள், அவருக்கு சொந்தமான கட்டடங்கள், வீடுகள், நிலங்கள் ஆகியவற்றை படிப்படியாக முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மார்ட்டினுக்கு தொடர்புடைய 451.07 கோடி மதிப்புடைய அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
இந்த நிலையில் மீண்டும் கொச்சின் அமலாக்கத்துறை லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மகன் மற்றும் மருமகன் ஆதவ் அர்ஜூன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் கடந்த 11 மற்றும் 12ஆம் தேதி சோதனை மேற்கொண்டனர். சென்னை போயஸ் கார்டன் கஸ்தூரி ரங்கன் சாலையில் அமைந்துள்ள மார்ட்டினின் வீடு, மருமகன் ஆதவ் அர்ஜுனின் அலுவலகம் உட்பட 3 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
சோதனையின் முடிவில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு தொடர்புடைய 457 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. குறிப்பாக இருப்பு தொகை, முதலீடு தொகை, அசையும் மற்றும் அசையா சொத்துகள் என 457கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மார்ட்டினுக்கு தொடர்புடைய மொத்தம் 908கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.