"454 கால்நடை உதவி மருத்துவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்" - ஓபிஎஸ்

 
ops

454 கால்நடை உதவி மருத்துவர்களை பணி நிரந்தரம் செய்ய தி.மு.க. அரசை ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுக்குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிராமப்புற பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கால்நடைகளுக்கு தரமான மருத்துவ வசதி அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, தரம் உயர்த்தப்பட்ட கால்நடை கிளை நிலையங்களை கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்த்துதல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், காலியாகவுள்ள கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புதல், புதிய பணியிடங்களை உருவாக்குதல், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்குதல் என பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்தவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய ஆட்சிக் காலத்தில், கால்நடை மருத்துவர்களின் அவசர மற்றும் அவசியத் தேவையைக் கருத்தில் கொண்டு, கால்நடை பராமரிப்புத் துறையில் ஏற்கெனவே காலியாக உள்ள 258 இடங்கள் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகங்களுக்காக புதிதாக உருவாக்கப்பட்ட 585 கால்நடை உதவி மருத்துவப் பணியிடங்கள் என 843 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தின்மூலம் நிரப்பப்பட்டன.

ops

இவ்வாறு முறையாக வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் மூப்பு மற்றும் திறன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கால்நடை உதவி மருத்துவர்கள் காலமுறை ஊதியத்தில் கடந்த 11 ஆண்டு காலமாக பணியாற்றி வருகிறார்கள். இந்தப் பதவியை வகிப்பதற்கான அனைத்துத் தகுதியையும் அவர்கள் பெற்று இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலை பணிகள் விதி 10(A)(i)-ன்கீழ் பணியமர்த்தப்பட்டவர்கள். இவர்களுடைய பணி தற்காலிகம் என்றாலும், ஊதிய உயர்வு வழங்கப்படுவதோடு, பங்களிப்பு ஓய்வூதியத்திலும் இணைந்து அதற்கான பங்கினையும் செலுத்தி வருகிறார்கள். 11 ஆண்டுகளுக்கு முன்பு 843 பேர் கால்நடை உதவி மருத்துவர்களாக பணியமர்த்தப்பட்டாலும், தற்போது 454 கால்நடை உதவி மருத்துவர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.

ops

 11 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், அவர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வினை எழுதுவது என்று சொல்வது இயற்கை நியதிக்கு மாறான செயல். கடும் போட்டிகள் நிரம்பியுள்ள தற்போதைய சூழ்நிலையில், நாற்பது வயதை கடந்துள்ள சூழ்நிலையில், தற்போதுள்ள பாடத் திட்டங்கள் மாறியுள்ள நிலையில், அவர்களால் இளம் கால்நடை பட்டதாரிகளுடன் போட்டிப் போடுவது என்பது இயலாத காரியம். பத்தாண்டுகள் தொடர்ந்து பணியாற்றினால் நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற சட்டம் இருக்கின்ற நிலையில், இதற்கு ஆதரவாக உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புகள் இருக்கின்ற நிலையில், இதற்கான முன்னுதாரணம் இருக்கின்ற நிலையில் அவர்களை போட்டித் தேர்வு எழுதச் சொல்வது ஏற்புடையதல்ல.

ops

மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலை பணிகள் விதி 10(A)(i)-ன்கீழ் பணியமர்த்தப்பட்டு நீண்ட நாட்களாக பணியாற்றி வந்த 12,000-க்கும் மேற்பட்ட இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், சுருக்கெழுத்து தட்டச்சர்கள் 1984 ஆம் ஆண்டு பணி நிரந்தரம் செய்யப்பட்டனர் என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தற்போது, தங்களுடைய பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி 454 கால்நடை மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள அறவழி போராட்டத்தை நடத்தியுள்ளனர். கால்நடை உதவி மருத்துவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தையும், அவர்கள் இவ்வளவு நாட்கள், குறிப்பாக கொரோனா தொற்று காலத்தில் ஆற்றிய சேவையையும் கருத்தில் கொண்டு, ஏற்கெனவே உள்ள முன்னுதாரணத்தை பின்பற்றி, 454 கால்நடை உதவி மருத்துவர்களின் பணியை உடனடியாக நிரந்தரம் செய்ய வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.