கொரோனா தடுப்பூசியால் 43 லட்சம் பேர் உயிர்தப்பினர்

 
vaccine

கொரோனா தடுப்பூசியால் 43 லட்சம் பேர் கொரோனாவால் ஏற்படும் மரணத்தில் இருந்து உயிர்தப்பியுள்ளதாக சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க செயலர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். 

சென்னையில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தின் செயலர் ரவீந்திரநாத் கூறியதாவது: தற்போது, கொரோனா பரவல் அதிகரிப்பது கவலை அளிக்கிறது. எனினும், நாட்டில் கொரோனா தடுப்பூசியால், 43 லட்சம் இறப்புகள் தடுக்கப்பட்டு உள்ளன. தடுப்பூசி போடுவதில் மத்திய - மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்துவதோடு, தகுதியுடையோருக்கு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசிகளையும் செலுத்த வேண்டும்.

டாக்டர்களுக்கான ஊதிய உயர்வு, காலமுறை பதவி உயர்வு, படிகள் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக, அரசு டாக்டர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அரசு அவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.  டாக்டர்களின் படிப்பிற்கேற்ப ஊதிய உயர்வை, கொரோனாவுக்கு முந்தைய தேதியிட்டு வழங்க வேண்டும்.டாக்டர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில், நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.