கள்ளச்சாராயம் தொடர்பாக தமிழகம் முழுவதும் தேடுதல் வேட்டை - 410 பேர் கைது!

 
police

தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி தேடுதல் வேட்டையில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த 410 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பா மேடு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.  இதை எக்கியார் குப்பம் மீனவர்கள் அருந்தியதாக தெரிகிறது. இதனால் ஆபத்தான முறையில் அவர்கள் மயங்கி விழுந்து உயிருக்கு போராடியுள்ளனர். இதை கண்ட  அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனை ஆகியவற்றில் சேர்த்தனர். நேற்று வரை 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இன்றும் 3 பேர் உயிரிழந்தனர்  கள்ளச்சாராயம் குடித்து ஆபத்தான நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயன், சங்கர், சரத்குமார் ஆகியோர் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.  இந்த சம்பவத்தில் தொடர்புடைய கள்ளச்சாராய வியாபாரி அமரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், இது தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்தனர். 

கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிள்ள நிலையில், தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். தேடுதல் வேட்டை நடத்தி அவர்களை கைது செய்யுமாறும் தமிழக டிஜிபி அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வரும் நிலையில், இதுவரை 410 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.