சென்னை செஸ் ஒலிம்பியாட் - 4000 போலீசார் பாதுகாப்பு

 
police

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளதாக தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை  44வது  உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படவுள்ளது இதுவே முதன்முறையாகும்.   இதில் சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த  வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.  செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெற இருந்தாலும், அதன்   தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. அத்துடன்  44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 23 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு பிரதமர் மோடிக்கு தமிழக அரசு சார்பில் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

chess

இதனிடையே இன்று காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் செஸ் ஒலிம்பியாட் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளதாக தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 காவல் ஆய்வாளர்கள், 380 உதவி ஆய்வாளர்கள், 3520 காவலர்கள் என மொத்தம் 4000 போலீசார் 17 நாட்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். ஒரு காவலருக்கு ரூ.250 வீதம் உணவுப்படியாக 1.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.