"4 மடங்கு மின் கட்டண உயர்வா?" தவெக அரசை வெளுத்து வாங்கிய சீமான்!

 
seeman

நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை;

தமிழகத்தில் நடப்பு மாதம் பெரும்பாலான வீடுகளுக்கான மின்சார கட்டணம் 4 மடங்கு வரை உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தவெக அரசு 200 அலகுகள் வரை மின்சாரம் இலவசம் என்று அறிவித்த நிலையில், அதற்கு நேர் எதிராகப் பெரும்பாலான வீடுகளுக்கு வழக்கத்தைவிடப் பல மடங்கு மின்கட்டணம் அதிகரித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் தாமதமாக மின் அளவீடு எடுக்கப்பட்டதும், பழுதான மின் அளவீட்டுக் கருவிகள் குறித்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்காமல் இருந்ததுமே மின்கட்டண உயர்வுக்குக் காரணம் என்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 200 அலகுகள் இலவச மின்சாரத்தின் பலன் மக்களுக்குக் கிடைக்கப்பெறாமல் இருக்க வேண்டுமென்றே திட்டமிட்டுத் தாமதமாக மின் அளவீடு செய்யப்பட்டதோ? என்ற சந்தேகமும் எழுகின்றது. தாமதிக்கப்பட்ட மின் அளவீட்டினால், மின்பயன்பாடு 500 அலகிற்கு மேல் அதிகமானதால், 200 அலகுகள் இலவச மின்சாரத்தின் பலன் கிடைக்காததோடு, ஓர் அலகிற்கான மின் கட்டண விகிதமும் அதிகரித்துள்ளது. தவெக தேர்தல் அறிக்கையில் மாதம் 200 அலகுகள் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று கூறியிருந்த நிலையில் தேர்தலில் வென்று ஆட்சி, அதிகாரத்தில் அமர்ந்த பிறகு இரண்டு மாதத்திற்கு 200 அலகுகள் இலவசம் என்றும், அதுவும் 500 அலகுகள்வரை பயன்படுத்தும் நுகர்வோருக்கு மட்டுமே என்றும் அறிவித்து மக்களை ஏமாற்றியது போதாதென்று தற்போது, மின் கணக்கீட்டில் குளறுபடிகள் செய்து வழக்கத்தைவிடப் பன்மடங்கு மின்கட்டணம் உயரவும் காரணமாகியுள்ளது பெருங்கொடுமையாகும். மின் கணக்கீட்டில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகரித்துள்ள மின் கட்டணத்தை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். வாக்குறுதிபடி மாதம் 200 அலகுகள் இலவச மின்சாரம் வழங்கும் அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும்.

இவ்வாறு சீமான் கூறி உள்ளார்.