#Breaking அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4% உயர்வு

 
stalin

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி  42 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

govt

இதுகுறித்து வெளியாகியுள்ள செய்திக்குறிப்பில், "அரசின்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும்பணியில் தங்களை அர்ப்பணித்து செயல்படும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கினை முழுமையாக உணர்ந்துள்ள இந்த அரசு, அவர்களின் நலனை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது. இந்த அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து, கடந்த அரசு விட்டுச் சென்ற கடும் நிதிநெருக்கடி மற்றும் கடன் சுமை, கோவிட் பெருந்தொற்றால் ஏற்பட்ட வருவாய் இழப்பு ஆகியவற்றுக்கு இடையேயும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன் இந்த அரசு செயல்பட்டு வருகின்றது.

money

இந்த வகையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு குறித்து கனிவுடன் பரிசீலித்து, இந்த உயர்வினை 01.04.2023 முதல் செயல்படுத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதன்படி, தற்போது 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 01.04.2023 முதல் 42 சதவீதமாக உயர்த்தப்பட்டு வழங்கப்படும். இதனால், சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இந்த உயர்வால் ஆண்டு ஒன்றிற்கு தமிழ்நாடு அரசுக்கு 2,366.82 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இந்தக் கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.

mk stalin

மேலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து, எதிர்வரும் காலங்களிலும் ஒன்றிய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம், உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வைச் செயல்படுத்திடும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.